Friday, August 29, 2014

எளிய கடவுள்

விநாயகப்பெருமான் எளிமையை விரும்புபவர். தாமும் எளிமையாகத் தோற்றம் அளிப்பவர். தனக்கென்று மேற்கூரைகூட வேண்டாமல் ஆற்றங்கரையிலும் மரத்தடியிலும் வீற்றிருப்பவர். வெய்யில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் தாங்குபவர். மழை வேண்டுவோர்க்கு ஆலங்கட்டி மழையையே வரவழைப்பவர். இவருக்கு சாத்தனூர் என்ற ஊரில் ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயரும் உண்டு(இப்பெயரை அவருக்குச் சூட்டியவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர்கள் ஆவார்கள்) சர்வ வல்லமை படைத்த முதல் மூர்த்தியானாலும் எளிய பூஜையை ஏற்பவர். உடனேயே வேண்டிய பலனை அளிப்பவர் . ஆதலால் க்ஷிப்ர பிரசாதர் எனப்படுவார். வள்ளியை வேட்ட கந்தப்பெருமானுக்கு அக்கணமே மணம் அருளிய பெருமான் ஆவார்.

பிள்ளையாரின் அருள் பெறுவதும் இதனால் எளிதான காரியமாகி விடுகிறது. வன்னி,கொன்றை, ஊமத்தை,வெள்ளெருக்கு,வில்வம் போன்றவற்றை விரும்பும் தமது தந்தையாகிய சிவபெருமானைப்போலவே தாமும் எளிமையான, மக்கள் ஏற்காத மலர், இலை போன்றவற்றை ஏற்கிறார். இவருக்கு வேண்டியதெல்லாம் எருக்கம்பூ மாலையும் அருகம்புல்லும் தான். முடிந்தவர்கள் கொழுக்கட்டை,அப்பம் போன்றவற்றையும் நிவேதிப்பார்கள்.
மிக எளிமையாகச்  செய்ய வேண்டிய பூஜையை மிகக் கடினமாகவும், செலவு மிக்கதாகவும், ஆடம்பரம் மிக்கதாகவும் மாற்றிக் கொண்டு வருகிறோம்.எந்த பூஜை ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கமும் பக்தி நிறைந்ததாக இல்லாவிட்டால் ஆடம்பரமே மிஞ்சும்.

மண்ணாலும்,மஞ்சளாலும்,வெல்லத்தாலும் விரல்களால் பிடித்து வைத்து பூஜை செய்து வந்த காலம்போய் , தெரு முனையில் அச்சில் செய்த மண் பிள்ளையார் பிம்பங்களை விலை கொடுத்து வாங்குகிறோம். பத்து வருஷம் முன்னால்  ஐந்து ரூபாய்க்கு வாங்க முடிந்த மண் பிள்ளையாரை இப்போது நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இரண்டு ரூபாய்க்குக் கிடைத்த குடையை  இப்போது இருபது ரூபாய் என்கிறார்கள்.  குடையை வீட்டிலேயே சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்னதாகவே வீடுகளில் செய்து வந்த காலம் போய் விட்டது. ஒரு முழம் பூ இருபத்தைந்து ரூபாய் என்று கூசாமல் விற்றாலும் வாங்குகிறார்கள். பழங்களின் விலையோ சொல்ல வேண்டாம்.

இத்தனை விலை கொடுத்து வாங்கியும் பூஜையில் மனம் லயிப்பதில்லை! செய்யாமல் விடக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. பூஜை எப்போது முடியப்போகிறது என்று  காத்திருந்துவிட்டு, ஓடிச்சென்று தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்வது!
கையில் பணம் மிதமிஞ்சிப்போனால் இப்படிதான் ஆகும். எல்லாம் செயற்கை ஆகிவிடும். பணத்தை வீசினால் எதையும் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விடும். விநயம்,பக்தி ஆகியவை பறந்து விடும். ஆனால் சுவாமியை ஏமாற்றி விட முடியாது. காலையும் மாலையும் கருத்து ஒன்றி நினைப்பவர் மனமே இறைவனுக்கு ஆலயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பணம் வசூலாகி விட்டது என்பதற்காக சுவாமி ஊர்வலத்தையும் அலங்காரத்தையும் ஆடம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை. கோயில் இருக்கும் பகுதியில் கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இரவு பூராகவும் அவை ஒளி வீசுகின்றன. இவற்றால் என்ன விளம்பரம் என்பது புரியவில்லை. இராப்பகலாக சம்பந்தமில்லாத பாடல்களை செவி கிழியும்படி ஒலிபெருக்கிகளில் அலற விடுகிறார்கள். அதைக்  கேட்பவர்களுக்குப்  பக்தி தோன்று வதாகவோ அதிகரிப்பதாகவோ எப்படிக் கருத முடியும்?

எனக்குப்பிடித்ததை நான் செய்கிறேன். பெரிதாகக் குறை கண்டுபிடிப்பதைப் பார் என்று நம் மேல் சீறுபவர்களையே காண முடிகிறது. இப்படி வாங்கும் ஒவ்வொரு பொருளும் மக்களின் சக்திக்கு அப்பால் பட்டதாக ஆகி விட்டால் வழிபாடு குறையவும், நம்பிக்கை குறையவும் வழி ஆகி விடுகிறது. எத்தனை காலம் ஆனாலும் இவ்வழிபாடுகள் குறையவோ நின்றுவிடவோ விலைவாசி ஒரு காரணமாகி விடக்கூடாது.எளிமை என்று சொன்னால் கஞ்சத்தனம் என்று அர்த்தம் இல்லை. ஆடம்பரமற்ற நிலை என்பதே பொருள். அதைப் பின்பற்றி வந்தால் இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நம்முடைய  கலாச்சாரத்திற்குக் குந்தகம் வந்து விடாது. அதற்கு நாம் நம்மைத்  தயார்படுத்திக்கொண்டு, மெதுவாகப் பழகிக்கொள்ள வேண்டும்.  

No comments:

Post a Comment