Tuesday, July 2, 2013

ஏன் இந்தக் காழ்ப்பு உணர்ச்சி ?

இறைவனை "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்று குறிப்பிட்டார்  திருவள்ளுவர். ஒருவகையில் பார்த்தால் இவ்விரண்டுமே பற்று அல்லவா? எனவேதான் "பற்று அற்றான்" என்றும் சுட்டிக்காட்டினார்  வள்ளுவர். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று பிறர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நமக்கே அது தெளிவாகத் தெரிகிறது. விருப்பும் வெறுப்பும் கடந்த நிலை நமக்கு வரவில்லை என்பது நன்றாகவே புரிகிறது. கண்டதெல்லாம் நமக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பு எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். விரக்தியோடு பேசுவதெல்லாம் வாயோடு சரி. உள்மனம் அதற்கு நேர் மாறாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

விருப்பே இப்படி இருக்கிறது என்றால் வெறுப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. நம் எண்ணமே சரி என்றும் அடுத்தவர்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றும் நினைக்கிறோம். அதற்காக  வெறுப்பை அவர்கள் மீது உமிழவும் தயங்குவதில்லை. "அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல்"  என்று எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர்  சுட்டிக்காட்டியுள்ளார்   பார்த்தீர்களா!

அண்மையில் நடந்த இயற்கைச் சீற்றத்தால் கேதார் நாத்  கோயில்  எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்பதையும் எத்தனையோ யாத்திரீகர்கள் உயிர் இழந்ததையும் இந்நேரத்தில் சிந்திக்க வேண்டுமே தவிர, இன்னாரது கருத்தே சரி என்றும் பிறர் கருத்து தவறு என்றும் வெளிப்படையாகக் கருத்துக் கூறுவது வேதனைக்கு உரியது. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வகையில் சமயத்திற்குக் கெட்ட பெயர் வராதபடி கருத்து தெரிவிப்பதில் தவறு இல்லை. பிற சமயத்தவர்கள் ஏளனம் செய்யும் வகையில் தங்களுக்குள் மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது வரையறை மீறக் கூடாது. இப்படிச் செய்தால் என்ன கெட்டுவிடும் என்று பேசும்போது எங்கோ ஒரு ஓரத்தில் நாத்திகம் தொனிக்கத்தானே செய்யும்? இந்தப் பிளவைப் பயன்படுத்திக் கொண்டு, கடவுள் ஏன் காப்பாற்றவில்லை என்று பிறர் ஏளனம் செய்யத் துடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது தானே?

இவ்வளவுக்கும் மீறி கேதார நாதனின் ஆலயம் அதிக பாதிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ஓரளவாவது மனம்  ஆறுதல் அடைய வேண்டிய நிலையில், ஒரு பெண்கள் பத்திரிகையில் வெளி வந்த கேள்வி பதிலில் வித்தியாசமாக பதில் தருவதாக நினைத்துக் கொண்டு, " இயற்கை தெய்வத்தை மட்டும் விட்டு வைத்ததோ" என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இயற்கையை ஆள்பவனே இறைவன் என்று ஏன் இவருக்குப் புரியவில்லை?

நிலைமை இப்படி இருக்கும்போது, வீர சைவம் என்றும் ஸ்மார்த்த வகுப்பினர் என்றும் பாகுபடுத்திக் கொண்டு நடந்த அழிவை ஒதுக்கி வைத்து விட்டு வாதம் செய்வதைக் கண்டால் வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அக்கறை உள்ளவர்கள் தமிழகத்திலேயே இடிபாடுகளில் சிக்கிச் சீரழியும் புராதன ஆலயங்களைத் திருப்பணி செய்ய முன்வராமல் வறட்டு கொள்கைகள் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த ஒற்றுமை இன்மை தான் பிறர் கையை ஓங்கச்  செய்கிறது. அச்சிறுபாக்கம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடம் போன்ற ஊர் மலைக் கோயில்களின் பக்கத்திலேயே, பிற சமயத்தவர்கள் ஆக்கிரமித்து மலைகளைத் தங்களதாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று ஜூலை 2 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளில் வெளி வந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு காணப்  போகிறார்கள்?

இனிமேலாவது, பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் பூஜை முறைகளை மதித்து , நமது வழிபாடுகளை நியமத்தோடு செய்து வந்தால் அவற்றை இறைவன் ஏற்று அருளுவான் என்பது  நிச்சயம். தேவர்களும் முனிவர்களும் வேதியரும் வணங்கும் உனக்குக் குற்றேவல் செய்ய முனைகின்றேன். பிழை உண்டேல் பொறுத்து அருளுவாயாக என்று பணிவோடு வழிபட்டோமானால், விருப்பும் வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகலுவதைக் கண்டிப்பாகக் காண்போம். வினயத்தையும் நியமத்தையும் நமக்கு அருளுமாறு  முழு முதற் கடவுளான   ஸ்ரீ பரமேச்வரன் அருள் செய்வானாக. 

No comments:

Post a Comment