Tuesday, January 31, 2012

மகாதேவன் சேவை மூலம் மக்கள் சேவை

                             இந்து சமயத்தின் பழமையையும் பெருமைகளையும் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் , மக்களுக்கு அது ஆற்றும் சேவைகளை  அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் நான்காவது ஆண்டாக, இம்முறை, சென்னையில் இந்து சமய ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி விமரிசையாக நடந்தது. 150 -க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர்  இதற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

பொருள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிக்கும் ஆன்மீகக் கண்காட்சிக்கும் உள்ள வேற்றுமை நன்றாகவே தெரிந்தது. இங்கு வந்தவர்களின் ஆன்மீக தாகம் நன்றாகவே வெளிப்பட்டது. என்னதான் வைத்திருக்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பவர்களை விட, தங்களுக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களே அதிகம் காணப்பட்டார்கள். சிலருக்குத்தான் எத்தனை எத்தனை சந்தேகங்கள்! ஒரு பெண்மணி ருத்ராக்ஷம் அணிவதைப் பற்றி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார். ' பெண்கள் ருத்ராக்ஷம் அணியலாமா; எவ்வளவு பெரிய அளவு வரை அணியலாம். தாலியோடு இணைத்து அணியலாமா; படுப்பதற்கு முன் கழற்றி வைத்து விட வேண்டுமா; ஒரிஜினல் ருத்ராக்ஷத்தை எப்படித் தெரிந்து கொள்வது; எத்தனை முகம் கொண்ட ருத்ராக்ஷம் அணியலாம் " இப்படி ஏராளமான கேள்விகள். இவ்வளவுக்கும் பதில் தெரிந்து கொண்ட பிறகு அவர்களாகவே முன்வந்து ருத்ராக்ஷம் வாங்கிச் சென்றபோது அவர்கள் முகத்தில் திருப்தி நிலவியது. ஒரு ஸ்டாலில் இலவசமாகவே ருத்ராக்ஷம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஓரிடத்தில் பழைய சிவாலயங்களில் திருப்பணி செய்ய வேண்டியது பற்றியும் ,மற்றொறு இடத்தில் அச்சிவாலயங்களில் தீபம் ஏற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். வேறொர் இடத்தில் ஒரு செடியின் இலையைக் கொண்டே தீபம் ஏற்ற முடியும் என்று சொல்லி, அச் செடியை விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில முக்கியப் பிரமுகர்களும் வருகை தந்திருந்தார்கள்.

இவ்வளவுக்கும் இடையில் www.shaivam.org அமைத்திருந்த அரங்கம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் சிவத்தொண்டு ஆற்றும் இணைய தளம் இது. 5000 த்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அருமையாக வடிக்கப் பெற்றுள்ளன. மாநிலங்களில் உள்ள சிவாலயங்கள் பற்றிய முழுத் தகவல்கள், பன்னிரு திருமுறைகள்,சைவ சித்தாந்த நூல்கள்,புராணங்கள் ஆகியவற்றின் மூல பாடங்கள், தமிழிலும் வட மொழியிலும் உள்ள துதிப் பாடல்கள், பதிவு செய்யப்பட பாடல்கள், வீடியோ காட்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட 24 மணி நேர ரேடியோ -- இப்படிச்  சிவனருளை வாரி வழங்குகிறது இந்த இணைய தளம். இராப்பகலாக இதற்கு உழைப்பவர்கள் இக்கண்காட்சியில் அந்த இணைய  தள நிகழ்ச்சிகளையும் பதிவுகளையும் காட்டி அருமையாக விளக்கியது பாராட்டுக்குரியது. இதை மற்றவர்களும் வீட்டிலிருந்தே கண்டு பயன் பெறுவது ஒன்றே அவர்களுக்குச்  செய்யும் கைம்மாறு.

ஒரு பெண்மணி கண்ணீர் மல்கத் தனது குறையையும் வெளியிட்டார்: " எனக்கு 60 வயது ஆகிறது.குழந்தைகள் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள். நானோ கோயில்களில் தொண்டு செய்வதில் பெரிதும் ஆர்வம்  காட்டுபவள். இதைக் கண்டு என் குடும்பத்தோர் பரிகாசம் செய்கிறார்கள். எனக்குத் தேவாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தோர் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்வேன்" இப்படி அப்பெண்மணி புலம்பியது நெகிழ வைத்தது. உலகத்தவர்கள் தன்னைப் பித்தன் என்று எள்ளி நகையாடியது பற்றிக் கவலைப் படாத மாணிக்கவாசகர் தன் நெஞ்சில் இறைவனை  நீங்காமல் கண்டதுபோல் நமக்குப் பக்குவம் ஏற்படவில்லையே. இறைவா, நீயே இதற்குத் துணை செய்ய வேண்டும்.  

Saturday, January 14, 2012

என்றும் புதியது


வேதமே தர்மத்திற்கு மூலம் என்றும் அதை ரக்ஷித்தால், அது நம்மை ரக்ஷிக்கும் என்று சொல்லுவார்கள். ரக்ஷிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை நசிப்பதையும் , கேவலப் படுத்துவதையும் அல்லவா பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! அதிலும் திரை உலகம் இச் செயலைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்தபோதிலும் கண்டிப்பவர்களைக் காணோம். அண்மையில் ஒரு திரைப் படத்தில் கதாநாயகனைக் காட்டும்போது புருஷ சூக்தம் ஒலிக்கப் படுவதாக ஒரு இணைய தளத்தில் வெளியான செய்தியை ஒரு பெண் சுட்டிக் காட்டியிருந்தார். பெண்ணாக இருந்தாலும் வேத தர்மத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை மற்றவர்களும் காட்டினால் நல்லது.

முன்பெல்லாம் கூடுமானவரையில் ஸ்டூடியோக்களுக்கு உள்ளேயே கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது கேட்பார் இல்லாமல் போனதால்  கோயில் வளாகத்துக்குள் ஆடல் (?) பாடல் (?) காட்சிகள் படமாக்கப் படுகின்றன. இவ்வளவு ஏன்? கோயில் மேல் தளக் கூரையில் இவற்றை எடுக்கிறார்கள். சின்னத்திரைக்காட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் மிகப் பெரிய கொடுமை என்ன என்றால், கோயிலுக்கு வரும் பக்தர்களை படப்  பிடிப்பு நடப்பதால் விரட்டி அடிப்பதே. இதற்கெல்லாம் அனுமதி அளிக்கும்  கோயில் நிர்வாகிகள் இந்தப் பாவத்திற்குத் துணை போகிறார்கள்.கும்பாபிஷேகம் செய்வது கோவிலைப் புனிதப் படுத்துவதற்கு என்று சொல்லிக்கொண்டு கூடவே இப்பாவங்களையும் அனுமதிப்பதால் அக்குடமுழுக்கு செய்தும் பலன் ஏதும் இருக்காது. கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? அதிலும் கேவலமான நடனங்களும், கோவிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத பாடல்களும் படமெடுக்கும் போ து நமது பண்பாடு எங்கே ஒளிந்து கொண்டது? தொட்டதற்கெல்லாம் நாகரிகம், பண்பாடு என்று முழங்குபவர்கள் இதில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?   இது அடுத்தவர்களின் வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகத்  தோன்றவில்லையா? மத நம்பிக்கையையும் சடங்குகளையும் இழிவு படுத்துவதை  சட்டம் எப்படித் தடுக்கப் போகிறது? இதற்கு நீதிமன்றங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

இன்னும் ஒரு மனித உரிமை செயலை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. போகி பண்டிகையின் போது ,பழையன போக்கலும் புதியன புகுத்தலும் என்று சொன்னாலும் சொன்னார்கள் , தற்போது அதை அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்கள் , தங்கள் வீட்டிலுள்ள பழைய துணிமணிகளையும் வேண்டாத சாமான்களையும் விடியற்காலையில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்தத் தீயில் , ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருள்களும் அடங்கும். ஊரே புகைமண்டலம் ஆகி விடுகிறது.வெளியில் போனால் மூச்சு திணறுகிறது. மாசுக் கட்டுப் பாடு வாரியமும் ,காவல் துறையும் என்ன செய்வார்கள் ,பாவம்! ஊ த வேண்டுமே என்று சங்கை ஊ துகிறார்கள். இப்படி அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் நமது பண்பாடா? சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வெறும் குரல் கொடுத்தால் போதாது. இக்குரல் உதட்டளவில் நில்லாமல் உள்ளத்திலிருந்து வர வேண்டும்.

தற்கால நிலையைப் பார்க்கும் போது வேறு விதமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது. பழைய நல்ல பழக்க வழக்கங்களைப் போக்காமல், புதியன என்று சொல்லிக்கொண்டு நம் கலாசாரத்தைப் புதைக்கும் திரைப்படங்களையும்,சீரியல்களையும் , ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே இப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக ஆக்கும். தீய எண்ணங்களை எரிப்பதும் ,பழையதாகத் தோன்றினாலும் என்றும் புதியதாக நிற்கும் நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றி, ஒளிவீசச் செய்வதுவே  நம்மைப் புனிதப்படுத்தும். குப்பைகளைக் கொளுத்தும் தீயாக போகிப் பண்டிகை நின்று விடக்கூடாது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற விலைமதிக்கமுடியாத சிந்தனைகளைப் புடம் போட்டுப் பார்க்கும் ஞானத் தீயாக அது இருக்கட்டும்.வேதமும் வேள்வியும் ஆன ஞான பரமேச்வரன் இப்படிப்பட்ட ஞானத்தை நம் எல்லோருக்கும் வழங்கி அருள வேண்டும்.

Tuesday, January 10, 2012

"பத்திரிகை தர்மம்"


                               "தர்மம்" என்ற வார்த்தையைத்தான் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்!  " யுக தர்மம்" , "யுத்த தர்மம்" என்பதுபோலப் பத்திரிகைகாரர்களும் "பத்திரிகை தர்மம்" என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறார்கள்.   இந்த "தர்மம்" அந்த பத்திரிகையை நடத்துபவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். சமூகத்திற்குப் பிடித்ததாகவோ,பயன் படுவதாகவோ இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. "சமூக நீதி" என்று ஒரு சொல் இருக்கிறதே தவிர, அதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். வாசகர்கள் எழுதும் கருத்துக்களோ,கட்டுரைகளோ இந்த "தர்மத்தை" ஒட்டியிருந்தால் ஒரு வேளை பிரசுரிக்கப் படலாம்.

   மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய  செய்திகள் எவை என்பதில் ஒரு காலத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மறந்தும் தீய எண்ணங்களை மக்கள் மனத்தில் ஊன்றி விடக் கூடாது என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல் பட்டார்கள். சமூகத்தில் நடைபெறும் குற்றம்,குறைகளை  சுருக்கமாக வெளியிடுவார்களே தவிர , அதற்குக் கண்ணும் காதும் வைத்து எழுதமாட்டார்கள். இப்பொழுதோ, "உரத்த சிந்தனை" என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதித் தங்கள் கருத்துக்கு ஒத்து வெளிவரும் செய்தித்தாள்களிலும் , பத்திரிகைகளிலும் அச்சேற்றுகிறார்கள்.  இதற்குப் பெயர், "வித்தியாச சிந்தனை"யாம். "எதார்த்தமாம்.

    வித்தியாசமாக எழுதினால் மட்டுமே மக்கள் வரவேற்பார்கள் என்பது தவறான கருத்து. நல்ல எழுத்துக்களுக்கு என்றும் மதிப்பு உண்டு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய புத்தகங்களை இன்றும் எவ்வளவு பேர் விரும்பி வாங்குகின்றனர் என்பதைச்  சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். ஆன்மீகக் கட்டுரை எழுதினால் ,"சிலிர்ப்பூட்டும் அனுபவம்"   என்று எழுத வேண்டும் என்பதில்லை. உண்மையான பக்தனுக்கு அவை தாமாகவே சிலிர்ப்பூட்டுபவை அல்லவா?

   சுற்றி வளைத்துக் கடைசியில் விஷயத்திற்கு வருவோம். வழிபாட்டு முறைகளிலும் ,அவை நடைபெறும் கோயில்களிலும் மக்கள் கூட்டம் சேரும் போது ஆர்வத்தின் காரணமாகச் சில கருத்து வேறுபாடுகளும் ,தள்ளு - முள்ளுகளும் ஏற்படுவது இயற்கை. இவற்றையெல்லாம்  சம்பந்தப் பட்டவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர , பெரிதாக்கக் கூடாது. தாரை-தம்பட்டைகளை பூஜை நேரத்தில் பெரிதாக ஒரு கோஷ்டியினர்  சிதம்பரம்  நடராஜர் சன்னதியில் ஒலிக்கச் செய்ததாகவும் , தீட்சிதர்கள் அதற்கு ஆக்ஷேபித்ததாகவும் ,அதைத்  தொடர்ந்து "தள்ளு-முள்ளு " ஏற்பட்டதாகவும், ஜனவரி பத்தாம் தேதியிட்ட செய்தித் தாள்  வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தித்தாளின் "பத்திரிகை தர்மம்"தான் என்ன? இது உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறார்களா? படிப்பவர்களுக்கு ,இப்படித் தடுத்துவிட்டர்களே என்ற அனுதாபமும் , தடுத்தவர்கள் மீது கோபமும் வர வேண்டும் என்பது நோக்கமா?  உண்மை, உண்மையாக இருக்கும் வரை உரைகல்லே தேவை இல்லை. இது  போன்ற சலசலப்புகள் எந்த மதத்தில் தான் இல்லை? அவை எல்லாம் வெளி வருகின்றனவா ?

பூஜை நேரத்தில் தில்லையில் ஒலிக்கப் படும் பெரிய மணியின் நாதமும் , நந்தி அருகில் அன்பர் பலர் ஒலிக்கும் சிறு சலங்கைகளின் ஒலியும் அந்த சூழலைச் சிவலோகம் என ஆக்கும் போது , மேன்மேலும்  ஒசைகள் தேவையா என்று யோசிப்பது நல்லது. இதனால் இசைக்குழு அன்பர்கள் மன வருத்தம் அடையாமல் பெரூமான் தேரில் வீதி வலம் வரும்போது தாரை -தம்பட்டை போன்ற வாத்தியங்களை வாசிக்கலாம். பக்தர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதுகூட, பாரம்பர்யமாக இறைவன் முன் வாசிக்கப் படும் நாதஸ்வர இசைக்குப் பங்கம் வராமல் ,சற்றுத் தொலைவில் இருந்து ஒலிக்கலாம்.

    சன்னதியில் பக்தி பரவசம் ஏற்படுவதற்கு அருகிலுள்ள சூழ்நிலையும் ஒரு காரணம். அவை நமது பக்தியை மேலும் வளர்க்கத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாக ஒரு போதும் அமைந்து விடக்கூடாது. இன்னிசை வீணையும் ,யாழும், வேத ஒலியும், தோத்திர  ஒலியும் , அன்பர்களை மெய்மறக்கச்செய்து இறைவனோடு ஒன்றாக்கும் அற்புதத்தைத் திருவாசகம் நமக்குக் காட்டுகிறது. ஆகவே, சைவ அன்பர்கள் தங்களால் இயன்ற சிவப் பணியை  பிற அன்பர்களும் விரும்பும் வகையில் ஆற்றி வந்தால் எந்த வேறுபாடுகளும் தோன்றாது. சூடான செய்திகளுக்குக் காத்திருக்கும் மீடியாக்களும் மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும் செய்திகள் வெளியாவதைத் தவிர்த்து, ஒற்றுமைக்கு வித்திட வேண்டும்.  மக்கள் ஒற்றுமையும் நலனுமே தேச நலன் என்ற ஒரே தர்மத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். அதுவே உண்மையான " பத்திரிகை தர்மம் " ஆகும்.